புழுவை பாம்பாக்கும் மந்திரம்; பேரிடராக்கல்
Saturday, May 15, 2010
ஒருவர் ஒரு பூதக்கண்ணாடி(உருப்பெருக்கும் கண்ணாடி) வாங்கினார்.அதனூடாக ஒரு சிறிய புழுவைப் பார்த்தார்.
அந்த புழு பெரிதாக ஒரு பாம்பு போலத்தெரிந்தது.
"ஐயோ பாம்பு '' என்று பதகளித்து கத்தி மயக்கம்போட்டு விழுந்தார்.
நீங்கள் சிரிக்கக்கூடும். இதென்ன முட்டாள்தனம் என்று யாராவது உலகத்தில் இப்படி இருப்பார்களா என்றும் யோசிப்பீர்கள்.
ஆனால் உலகத்தில் நிறையப்பேர் இப்படி இருக்கிறார்கள்.
பாருங்கள் இந்தப்பெண்ணை. கடுமையாக பரீட்சைக்கு படிக்கிறாள்.
பிள்ளை வடிவாய் படி நீ முதலாவாதாய் வரவேணும். நான் என் மகள் இந்தமுறை இந்த மாகாணத்திலேயெ முதலாவதாய் வருவாள் என்று சொல்லியிருக்கிறேன். இது அம்மா டீச்சர்.
" பிள்ளை இது ஒரு முக்கியமான பரீட்சை இதுதான் உன்னுடைய எதிர்காலம்'' இது அப்பா.
அந்தப்பிள்ளைக்கு படித்துக்கொண்டிருக்கும்போது தெறித்து விழுந்த எண்ணம் இது.
இந்தப் பரீட்சையில் நான் பெயிலானால்?
''கடவுளே என்னால் நினைச்சுப்பார்க்கமுடியவில்லை.அம்மா வெளியிலை தலை காட்டமுடியாது.அப்பாவுக்கு ஏமாற்றம்.என்னுடைய எதிர்காலமே இருண்டு போய்விடும்.நான் எப்படி வெளியில் தலைகாட்டுவது. இந்தப்பரீட்சை ஒரு வாழ்வா சாவா? போராட்டம்''
அந்தபெண்பிள்ளைக்கு பரீட்சை பீதி வந்துவிட்டது.மனதில ஒரு பதற்றம்.பிறகென்ன எல்லாம் மறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு.
நான் வேதனையோடு சொல்லுகிறேன் இந்த பதற்றங்களால் பரீட்சைகளை தவற விட்டு பல்கலைகழகங்களுக்கு செல்லாத மிகத்திறமையான பலர் இருக்கிறார்கள்.
என்ன நடக்கிறது இங்கே ?
பரீட்சையில் தோல்வி என்பது சகஜம். ஆனால் இங்கே அந்த தோல்வி ஒரு பெரிய வீழ்ச்சியாக மனம் உருவகித்து விடுகிறது.
அதாவது சிலருடைய மனத்தில் இப்படி பூதக்கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது. இவர்கள் சிறு அழிவை பேரழிவாக எண்ணுவார்கள். இடரை பேரிடராக எண்ணிக்கலங்குவார்கள். மற்றவர்களையும் கலங்கடிப்பார்கள்.
இது ஒரு வகை தவறான சிந்தனைப்பழக்கம். இதை பேரிடராக்கல் அல்லது பேரழிவாக்கல்catastrophizing என்று சொல்லுவார்கள்.
இந்தச்சிந்தனைப்பழக்கமுள்ளவர்களின் மனம் சட்டென்று பயங்கரமானதுக்கு தாவிவிடும்.
சிற்றலையை சுனாமியாக்கிவிடுவார்கள்.
அதாவது ஒரு சிறு தோல்வியை தாங்கமுடியாததோல்வியாக நினைத்துக்கொள்வார்கள்.சிறிய தவறை பெருந்தவறாக எண்ணிவிடுவார்கள். இது அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை பாதித்துவிடும்.
அந்தப்பெண் பரீட்சைக்கு முதலேயே தோல்வியை நினைத்ததுமாத்திரமல்லாது அதை பேரிழப்பாகவும் உணரத்தொடங்கியதனால் பயத்தினால் பரீட்சைக்கு தயார்ப்படுத்தமுடியாமல் போய்விடுகிறது.
அன்றாட வாழ்வில் சின்னச்சின்ன விஷயங்களிலெல்லாம் நாம் இந்த பூதக்கண்ணாடியைப் பாவித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
நாம் விடும் சின்னத்தவறுகளை பெரிதாக்கி பயந்து மறுகிக்கொண்டோ , நடக்கப்போவதை நினைத்து நடுங்கிக்கொண்டோ தோல்விகளில் சிக்கி நசியுண்டு நலிந்துபோயோ காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.
நம் எண்ணங்களை அவதானித்தால் போதும். அட சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறேனே என்று புரியும். கடந்து வந்த வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் இதை விட பெரிய முதலையின் வாயிலிருந்து தப்பிவந்திருப்போம் என்பது தெரியும்.
நிகழ்காலத்தில் உள்ள கடமைகளை எதிர்காலம் பற்றிய பதற்றமில்லாமல் செய்தால் எதிர்காலம் நன்றாக அமையும்.
'' என் கணவருக்கும் இப்படி பிரச்சனை இருக்கிறது''
'' அடடே அப்படியா? அப்படி என்னதான் செய்கிறார் '''
'' சோற்றுக்குள் இருக்கும் கல்லை பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து இந்தக்கல் தொண்டையில் சிக்கியிருந்தால்,.. என்று பதைபதைத்துப்போகிறார்''