AdsforIndians

கணவரிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?

Tuesday, April 6, 2010

கணவரிடம் நல்ல பெயர் எடுப்பது எப்படி?


ஒரு மாலைப் பொழுதில் ஆழ்ந்த கலந்துரையாடலில் இருந்த 'அண்ணாநகர் (சென்னை) லேடீஸ் கிளப்' பெண்கள் மத்தியில் இப்படியொரு கேள்வியை கொளுத்திப் போட்டோம். உற்சாக பட்டாசாக சீறி வந்தன உபயோகமான டிப்ஸ்!

''
கணவருக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்டாலே அவரோட மனசை ஈஸியா ஜெயிச்சிடலாம். அதேமாதிரி, கரண்ட் பில் கட்டறது, வீட்டை நிர்வாகம் பண்றதுனு நம்மால முடிஞ்சதை செய்யணும். கணவரைவிட அதிகமா நாம படிச்சிருந்தாலும் சரி, அவரைவிட அதிகமாக சம்பாதித்தாலும் சரி, கர்வமில்லாம பணிவா நடந்துக்கிட்டா கணவரோட மானசீக மகாராணியாகிடலாம்!'' என்று கலந்துரையாடலுக்கு பிள்ளையார் சுழி போட்டார் கிளப்பின் செகரட்டரி தங்கமணி விஸ்வநாதன்.

''
கரெக்ட் மேடம்.!'' என்று ஆமோதிப்போடு தொடங்கிய கிளப்பின் துணைத்தலைவர் மீரா சங்கரமூர்த்தி, ''அதேபோல, தனக்குப் பிடித்தவர்கள் நம்ம வீட்டுக்கு வந்தா அவங்களுக்கு மனக்குறை ஏதும் வராதபடி நல்லா உபசரிக்கணும்கிறதும் ஆண்களின் பொதுவான எதிர்பார்ப்பு. இப்படி, அவருக்கு கெட்ட பேர் வராதபடிக்கு நாம நடந்துக்கிட்டாலே நல்ல பேர் வாங்கிடலாம்..'' என்று கூற, இடைமறித்தார் கீர்த்தி நாராயணன்.

''
அதோட, ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு டயர்டா வர்ற கணவர்கிட்ட, 'ஏன் முகம் இப்படி இருக்கு, ஆபீஸ்ல இன்னிக்கு என்ன நடந்தது, அப்படி இப்படி..'னு கேட்டு தொணதொணக்க கூடாது. சூடா காபியோ, டீயோ போட்டுக் கொடுத்து, அவருக்கு தேவையானதை செய்துட்டு நகர்ந்திடணும். ஏதாவது சீரியஸான பிரச்சனைன்னா அவரே சொல்லிடப் போறார். அதேமாதிரி, நமக்கு ஒரு பொருள் வாங்கணும்னு தோணும்போது கணவர் இப்போ இதை வாங்கவேண்டாம்னு சொல்றார்னா சரினு கேட்டுக்கணும். ஏன்னா, வாங்கக்கூடிய சூழ்நிலை இப்போ இல்லைனு அவருக்கு தெரியும்போது, நமக்கும் அது தெரியணும்தானே!'' என்றார் யதார்த்தமாக.

''
நாங்க ரெண்டு பேருமே கொஞ்சம் அமைதியான டைப்ங்கறதால, ஒருத்தருக்கொருத்தர் நல்லாவே அட்ஜஸ்ட் பண்ணிப்போம். என்கூட பிறந்தவங்ககிட்ட பழகற மாதிரியே அவரோட சகோதர சகோதரிகள்கிட்ட நான் பழகறது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பொதுவாக அவர் ஏதாவது ஒரு காரியத்தை செய்யாதேன்னு சொன்னா, அதை மீறி இது நாள் வரைக்கும் நான் செய்தது இல்லை. எல்லா விஷயத்திலயும் நாங்க 50&50தான்'' என்றார் வேணி மகாலிங்கம் மென்மையான புன்னகையுடன்.

''
கண்டிப்பா, இது எல்லோருமே ஃபாலோ பண்ண வேண்டிய ஒண்ணுதான். அதோட, பெரும்பான்மையான ஆண்களுக்கு.. என் வீட்டுக்காரர் உட்பட, அவங்களோட உடன்பிறந்தவங்ககிட்ட பாசம் காட்ட தெரியுமே தவிர, எந்தெந்த விசேஷத்துக்கு என்னென்ன செய்முறை செய்யணும், என்னென்ன வாங்கிக் கொடுக்கணும்ங்கறது சரியா தெரியாது. பல நேரங்கள்ல எங்க வீட்டு விசேஷங்கள்ல, அவர்கிட்டேயிருந்து பணத்தைக் கூட எதிர்பார்க்காம, நான் சேர்த்து வைச்சிருக்கிற பணத்தை வைத்தே தேவையானதை செய்திடுவேன். அப்புறம் அது அவருக்கு தெரியவரும்போது, ரொம்பவே சந்தோஷப் படுவார். அதேமாதிரி, அவருக்கு பிடிக்காத எதையும் நான் செய்யமாட்டேன். அதுக்காக அவர் சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டி விடுவேன்னு இல்லை. 'ரெசிஸ்டன்ஸ்' (எதிர்ப்பு) இல்லாத வாழ்க்கையில ருசி இல்லை தானே'' என்றார் ரேவதி நடராஜன்.
அண்ணாநகரில் 'பொட்டீக்' நடத்திவரும் பத்மினி குமாரவேலு, ''என்னைப் பொறுத்தவரை கணவருக்கு பிடித்த மனைவியா இருக்கணும்னா, அதுக்கு மூணு விஷயங்கள் முக்கியம். ஒண்ணு, அவருக்கு பிடித்தமான சமையல். இரண்டாவது, கணவர்கிட்ட ஒளிவு மறைவு இல்லாம இருக்கறது. நம்மை பத்தின ஏதாவது ஒரு விஷயம், அது தப்பாவே இருந்தாகூட அது இன்னொரு நபர் மூலமா தெரியறதைவிட நம்ம மூலமா கணவருக்கு தெரியறதுதானே நல்லது. மூணாவது, அவரோட பெற்றோரை நம்ம பெற்றோரா நினைத்து நல்லாப் பார்த்துக்கறது. இந்த மூணும் சரியா இருந்துட்டாலே கணவர்கிட்ட எளிதாக நல்ல பேர் வாங்கிடலாம்!'' என்று டிப்ஸ்களை அள்ளி விட்டார்.

''
சரியா சொன்னீங்க பத்மினி! அதே போல, குறிப்பறிந்து நடந்துக்கறதும் ரொம்ப முக்கியம். எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரசனைங்கிறதால கடைக்கு ஏதாவது வாங்கப் போகும்போதுகூட பெரிசா அபிப்ராய பேதம் ஏதும் வந்ததில்லை. ஆனாலும், ஏதாவது ஒண்ணு, எனக்கு பிடிச்சு அது அவருக்கு பிடிக்கலைன்னா, அதை அவரது முகமே காட்டி கொடுத்து விடும். குறிப்பறிந்து நானும் அதை வேண்டாம்னு விட்டுடுவேன். அதேபோல, அவர் வெளியில போயிட்டு வரும்போது, பூட்டிட்டு நான் எங்கேயும் போயிடாம வீட்டில இருக்கணும்னு எதிர்பார்ப்பார். 'வெளியில பல வேலையா போயிட்டு வர்ற மனிதருக்கு வீட்ல வந்து நம்ம முகத்தை பார்த்தா எதிர்பார்க்குறார்&னு அவரோட கோணத்திலிருந்து புரிஞ்சி கிட்டாலே போதும், அமைதியான ஓடை போல வாழ்க்கையும் சீராக போகும்!'' என்று அனுபவக் குறிப்பை வழங்கிய அழகம்மை பழனியப்பன், தனது அக்காவின் மறைவுக்கு பிறகு, அக்கா கணவருக்கு இரண்டாவது மனைவியானவர். அக்காவின் இரு மகன்கள், தனது மகன் என மூன்று மகன்களையுமே தான் நன்றாக கவனித்துக் கொள்வதும் தனது கணவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார் இவர்.
அமைதியாகவே இருந்த பிரமிளா பாலகிருஷ்ணனை, ''என்ன பிரமிளா மேடம், நீங்க நல்ல பெயர் வாங்கற ரகசியத்தை எங்களுக்கு சொல்லக்கூடாதா?'' என்று மீரா சீண்ட.. ''பெரிய சிதம்பர ரகசியம் எல்லாம் ஒண்ணுமில்லை. எங்க பாட்டி எங்க எல்லாருக்கும் சின்ன வயதிலிருந்து ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லுவாங்க.. அதாவது, வீட்டு பெண்களோட குரல் வீட்டைத் தாண்டி வெளியில கேட்கக்கூடாதுனு. பொறுமையா, மென்மையா, நிதானமா எல்லா விஷயங்களையும் கையாண்டாலே போதும், இல்லறம் இனிய இல்லறமா, நல்லறமா இருக்கும்!'' என்றார் பிரமிளா, முத்தாய்ப்பாக.
சும்மாவா சொன்னார் வள்ளுவர், 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்று.

0 comments:

Post a Comment

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP